யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன் PC அவர்கள், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினறும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார்.

16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது.

கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன்றும் தெளிவாகக் காணப்படும் நிலையில் உள்ளது.

புத்தசாசன அமைச்சின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, கோட்டையின் உண்மையான எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முற்றவெளி விளையாட்டு மைதானம், முனீஸ்வரன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், உள்ளூராட்சி அல்லது பொதுமக்களுடன் ஆலோசனை செய்யாது எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

கோட்டையை வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க அரசு, முன்னாள் காலனிய நாடுகள், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோட்டை வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட வேண்டும் சுமந்திரன் அவர்களிடம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செலஸ்டின் அவர்கள் வலியுறுத்தினார்.

கடந்த சில வாரங்களில் கோட்டையின் வரலாற்றுச் சுவர்களிலிருந்து தூரமாக அமைக்கப்பட்டிருந்த Concrete தூண்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல மத மற்றும் பல பண்பாட்டு மரபுகள் இணைந்துள்ள வரலாற்றுத் தளங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ள தொல்லியல் துறை நிர்வகிக்கக் கூடாது; சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இக்கருத்துகளை சுமந்திரன் அவர்கள் பொறுமையாகக் கேட்டு, கோட்டையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )