
கொழும்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது – வெள்ளவத்தையிலும் சோதனை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரத் வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப். ஜகத் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகளில ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கைது நடவடிக்கையின் போது மூன்று கிலோகிராமுக்கு மேல் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே இந்த ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டெடுத்தனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
