‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம்

‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம்

‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் திகதிக்கு  ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகியுள்ளது.

முன்னதாக, இன்று காலை விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக அறிவித்தது.

தனி நீதிபதி பிறப்பித்த இந்தத் தீர்ப்புக்கு எதிராக, தணிக்கை வாரியம் தரப்பில், தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தணிக்கை வாரியம் தரப்பில் உடனடியாக மேல்முறையீட்டு மனு தயார் செய்து தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தணிக்கை வாரியத் தரப்பில், “தணிக்கை சான்று வழங்கக் கோரி மட்டுமே படக்குழு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம் கோராத நிவாரணம் எல்லாம் நீதிமன்றம் வழங்கி இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,படத்துக்கு எதிரான புகாரை மும்பை அலுவலகத்தில் இருந்து பெற்று சமர்ப்பித்திருக்கிறோ, எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் போதிய அவகாசம் கோரினோம். அதுவும் அளிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “தணிக்கை வாரியக் குழுவின் உறுப்பினரே எப்படிப் புகார் அளிக்க முடியும்?” என்று வினவப்பட்டது. அதற்கு நீதிபதி, “இது வாதத்துக்கு உரிய விஷயம்” என்று கூறினார்.

மேலும், “தணிக்கை வாரியத் தரப்புக்கு நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்?” என்று நீதிமன்றம் வினவியது.

மேலும், “தணிக்கை சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள்.

நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா?” என்று படத் தயாரிப்புக் குழுவுக்கு தலைமை நீதிபதி கேள்விகளை முன்வைத்தார்.

ஜன.21-க்கு ஒத்திவைப்பு: தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார். மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் திக்குக்கு தள்ளி வைத்தார். இதனால், பொங்கலையொட்டி ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படத்தின் வெளியீடு மேலும் தாமதம் ஆகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )