
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மண்சரிவுகள் தொடர்பான சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதன்படி, ஈதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அனர்த்த நிலைமை காரணமாக நடைபெறாத உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2086 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக தேசிய அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், அதிபரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்கு எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விண்ணப்பதாரர்கள் பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சை எழுதலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
