
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு தவறும் பட்சத்தில் நீதிமன்றின் மூலம் பிடியாணை கோரப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொரியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாகச் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல நேற்று (ஜனவரி 4) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில், சதொச நிறுவனத்தின் லொறியை அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த முறைகேட்டின் மூலம் அரசாங்கத்தின் பொதுச் சொத்துக்கள் தனிப்பட்ட வணிக லாபத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரின் மகன் ஜொஹான் பெர்னாண்டோவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக விசாரணைகள் நீண்டு வருகின்றன.
