
கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி விசாரணைகளின் மூலம் இவ்வாறான ஒரு பொருத்தமற்ற இணையதளப் பெயர் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பது திட்டமிட்ட ஒரு சதி நடவடிக்கையாக இருக்குமோ என்ற பலமான சந்தேகம் அமைச்சிற்கு எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு பாடப்புத்தகமானது அச்சிடுவதற்கு முன்பதாக பல கட்டங்களில் பரிசோதிக்கப்பட்டு, திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இறுதி நிலையை அடையும் என்பதால், இவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி இந்தத் தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது வெறும் கவனக்குறைவால் ஏற்பட்ட தற்செயலான தவறா அல்லது கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைப்பதற்காக யாராவது வேண்டுமென்றே செய்த சதித் திட்டமா என்பதைக் கண்டறியுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, வெளித்தரப்பு தலையீடுகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் முறையான விசாரணை அவசியம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஏனைய பாடப்புத்தகத் தொகுதிகளும் தற்போது தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
