
193 கி.கி. இற்கும் அதிக போதைப்பொருட்களுடன் ஐவர் கைது
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, சுமார் 193 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள், உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகு ஒன்றின் மூலம் கடத்தப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த படகுடன் சந்தேகநபர்கள் இன்று (24) காலை திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
அங்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில், சுமார் 172 கிலோகிராமிற்கும் அதிக ஐஸ் (Ice) போதைப்பொருளும், 21 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு வருகை தந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை நேரில் பார்வையிட்டனர்.
“போதையற்ற நாடு – ஆரோக்கியமான பிரஜை” என்ற அரசாங்கத்தின் இலக்கிற்கு அமைய ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் முப்படைகளும், பொலிஸாரும் மற்றும் அனைத்து புலனாய்வுப் பிரிவுகளும் இணைந்து திட்டமிட்ட அடிப்படையில் இந்த சுற்றிவளைப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார். நாட்டுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வரும் கடத்தல்காரர்களுக்கு இனி எவ்வித இடமும் இல்லை என்றும், இவ்வாறான அழிவுகரமான செயல்களில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது முப்படைகளும் பொலிஸாரும் மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தேசிய பாதுகாப்பிற்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க எவ்வித இடமும் வழங்கப்படாது என அவர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ், சர்வதேச புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கான அவசர இலக்கம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்க ‘1818’ என்ற விசேட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக சரியான தகவல்களை வழங்கும் பொதுமக்களுக்கு விசேட வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், போதைப்பொருள் அபாயம் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பையும் அவர் இதன்போது பாராட்டினார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், மீன்பிடி படகுடன் ஐந்து சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
