
இங்கிலாந்து அணிக்கு DRS Review வாய்ப்பை மீண்டும் வழங்க தீர்மானம்
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆஷஸ் (Ashes) டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து அணி இழந்த ஒரு மீளாய்வு (DRS Review) வாய்ப்பை மீண்டும் வழங்க போட்டி நடுவர் தீர்மானித்துள்ளார்.
அடிலெய்டு மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் போது, அவுஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி 72 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜோஷ் டங் வீசிய பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்ததாக இங்கிலாந்து முறையிட்டது.
கள நடுவர் அதனை ஆட்டமிழக்கவில்லை (Not Out) என்று அறிவித்த நிலையில், இங்கிலாந்து அணி அதற்கு மீளாய்வு கோரியது. அப்போது, ‘சினிக்கோ’ (Snicko/RTS) தொழில்நுட்பத்தில் பந்து துடுப்பைக் கடந்து செல்வதற்கு முன்னரே சத்தம் (Spike) கேட்டதால், தொலைக்காட்சி நடுவர் கள நடுவரின் முடிவைச் சரி என அறிவித்தார்.
போட்டி முடிவடைந்த பின்னர், தான் அந்தப் பந்தைத் துடுப்பால் அடித்ததை அலெக்ஸ் கேரி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ‘சினிக்கோ’ தொழில்நுட்பத்தை வழங்கிய பிபிஜி ஸ்போர்ட்ஸ் (BBG Sports) நிறுவனம், தொழில்நுட்பத்தை இயக்கியவர் தவறுதலாக வேறு ஒரு ஒலிவாங்கியை (Stump Mic) தெரிவு செய்ததால் இந்தத் தவறு நிகழ்ந்ததாகக் கூறி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.
இதனால் அதிருப்தியடைந்த இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் முகாமையாளர் ஆகியோர் போட்டி நடுவர் ஜெப் குரோவிடம் (Jeff Crowe) பேச்சுவார்த்தை நடத்தினர்.
விதிமுறைகளின்படி, தொழில்நுட்பக் கோளாறால் ஒரு மீளாய்வு தடைப்பட்டால் அதனை மீண்டும் வழங்க நடுவருக்கு அதிகாரம் உண்டு. இதன்படி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் அந்த மீளாய்வு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், ஆட்டமிழந்திருக்க வேண்டிய அலெக்ஸ் கேரி தொடர்ந்து விளையாடி சதம் (106) கடந்த பின்னரே இந்தத் தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
