
இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு
இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு இவ்வாரம் சென்னை செல்லவுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது ‘ஏக்கியராஜ்ய’ அதாவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பைத் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஒற்றையாட்சி முறைமையை தடுத்து நிறுத்தி, உண்மையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவர சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பிராந்திய வல்லரசான இந்தியா, இலங்கை அரசுக்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான சூழலை உருவாக்க தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காகச் சென்னை செல்லவுள்ள உயர்மட்டக் குழுவில்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைவர்)
பொ. ஐங்கரநேசன் (தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர்)
செல்வராஜா கஜேந்திரன் (செயலாளர்)
T. சுரேஸ் (தேசிய அமைப்பாளர்)
K. சுகாஷ் (சிரேஷ்ட சட்டத்தரணி மற்றும் உத்தியோகபூர்வ பேச்சாளர்)
N. காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி மற்றும் பிரசாரச் செயலாளர்)
ஆகிய பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஈழத் தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து இவர்கள் விரிவாக விளக்கமளிக்கவுள்ளனர்
