அரசாங்கத்தின் தன்னிச்சையான இடமாற்றங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
அரசாங்க மட்டத்திலும், மாகாண சபை மட்டத்திலும் இடம்பெறும் தன்னிச்சையான இடமாற்றங்கள் தொடர்பில் ஆராய விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக,பெயர் குறிப்பிட்டு அல்லது குறிப்பிடாது தகவல்களை வழங்கு அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசாங்க மற்றும் மாகாண சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து தன்னிச்சையான இடமாற்றங்களையும் இடைநிறுத்துமாறு அரசாங்கத்திடமும் மாகாண சபை அதிகாரிகளிடமும் வலியுறுத்துகிறோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையில்,
“அரசாங்க மற்றும் மாகாண சபைகளின் பல பகுதிகளில் பணியாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமற்ற அடிப்படையில் சேவை பதவிகளை மாற்றுவதற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது.
இதனால் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி செயலாளர்கள், கூட்டுறவு உதவி அபிவிருத்தி ஆணையாளர் போன்ற ஊழியர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச சேவையின் சுதந்திரத்தை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
இன்னும் முடிவடையாத, விரைவில் நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் இந்த நாட்களில் கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெறவுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அரச சேவையில் துரித அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருவதும், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் தெளிவாக காண முடிகிறது.
இந்த இடமாற்றங்களில், அந்தந்த துறைகளில் பணியாற்றும் பணிகளில் சிக்கல் நிலை ஏற்படுவது மட்டுமின்றி, அதிகாரிகளும் தனிப்பட்ட ரீதியில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.