13ஆவது திருத்தச்சட்டம் – தமிழக கட்சிகள் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ; வரதராஜ பெருமாள்
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்ததுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வித கருத்துகளை முன்வைத்திருக்கவில்லை. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வரதராஜ பெருமாள்,
”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்த போதும், 2023ஆம் ஆண்டு சென்றிருந்த போதும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்திருந்தார்.
ஆனால், இம்முறை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்பட்டதான செய்திகள் எதுவும் இல்லை. இது கவலையளிக்கிறது.
இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் பிரதமர் மோடியிடம் 13ஐ அமுல்படுத்தும் அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என கோர வேண்டும்.
1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் பிரகாரம்தான் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே, அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும்.” என தி இந்து பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.