
இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் ஒன்று தசம் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டதில் அதிகபட்சமாக 118 பேர் உயிரிழந்துள்ளனர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும் கேகாலை மாவட்டத்தில் 30 பேரும், குருநாகலில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோசமான பேரிடரில் சிக்கி இதுவரை 341 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கண்டி மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு சேதம் திகைக்க வைப்பதாகவும் 2,303க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 52,489 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், பேரடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1,231 பாதுகாப்பு மையங்களில் 51,023 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 171,778 பேர் பாதுகாப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 306,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கம்பஹா மாவட்டத்தில் 322,342 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 322,976 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் மன்னார் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 124,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், உணவு, மருத்துவ உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்க அவசரகால மீட்புக் குழுக்கள் 24 மணி நேரமும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
