பண்டிகைக் காலங்களில் கொழும்பில் 600 டொன் குப்பைகள் சேகரிப்பு
பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 600 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக குறித்த மாநகர சபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் நகரில் குப்பைகள் சேகரிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 500 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டிசம்பர் 31ஆம் திகதி இரவு, காலி முகத்திடல் மைதானத்தில் ஒன்று கூடுபவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளை அகற்ற சுமார் 150 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
தொழிலாளர்கள் விடியும் வரை குப்பைகளை அகற்றிவிட்டு மறுநாள் காலை 6:00 மணிக்குள் கொழும்பை அழகிய நகரமாக மாற்றுவார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த இடங்களில் சேரும் குப்பைகளை உரிய முறையில் தொட்டிகளில் போட வேண்டும் அல்லது அவற்றை எடுத்துச் செல்ல முன்வர வேண்டும் என அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கோட்டை பிரதேசத்தில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த நாட்களில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை ஆணையாளர் குறிப்பிட்டார்.