சபையில் இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் இடையே வாக்குவாதம் – நாடாளுமன்றில் சலசலப்பு

நாடாளுமன்றத்தின் இன்றைய (20.11.2025) அமர்வில் உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய இளங்குமரன், சிலர் கமராக்கு முன்னாள் வீர வசனம் பேசுவதாகவும் கமராக்கு பின்னால் தமிழர்களை கொன்றவர்களிடம் கைகோர்த்து பழகுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த நபர் பரீட்சையில் எழுத தெரியாமலேயே சித்தியடைந்து விட்டு நாடாளுமன்ற கமராக்கு முன்னாள் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழரின் கலாசாரமான ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கூட நிறுவ முடியாதவரே அவர் எனக் கூறியுள்ளார்.
முகநூலில் ஒழுங்காக தமிழில் கூட எழுத முடியாதவர் தான், நான் சிங்களத்தில் கதைக்கும் போது விட்ட பிழையை பெரிதாகக் கூறினார் என தெரிவித்தார்.
அத்துடன், யாரை திருமணம் செய்துள்ளேன் என கூற முடியாத ஒருவர் எப்படி தமிழ் கலாசாரத்தை மேலோங்க செய்வார் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, இன்று மின்சாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இளங்குமரன் எம்.பி சம்பந்தமில்லாமல் பேசியதை யாரும் நிறுத்தவில்லை எனக் கூறினார்.
அத்துடன், தான் தமிழன், எனக்கு இனவாதம் இல்லை எனவும் தான் சிங்கள மக்களை காதலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, அர்ச்சுனா எம்.பியின் ஒலிவாங்கி நிறுத்தப்பட, நாடாளுமன்றத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
