சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு

ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு இடம்பெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனை கொடுத்து சென்னை அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜாவைக் கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
எனினும், இந்த உடன்படிக்க முழுமை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கு ஈடாக சாம்சனை நேர்மையான பரிமாற்றமாக மட்டும் செய்ய ராஜஸ்தான் ரோயல்ஸ் விரும்பவில்லை.
மாறாக சாம்சனுக்கு பதிலா ஜடேஜாவுடன், மற்றொரு வீரரையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் ரோயல்ஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உடன்படிக்கை முழுமைய அடைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரு வீரர்களும் அவரவர் அணிகளால் தலா 18 கோடி ரூபாவிற்கு தக்கவைக்கப்பட்டதால், ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் என்ற நேரடிப் பரிமாற்றம் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது.
எனினும், ரோயல்ஸ் அணி கூடுதலாகத் தென்னாப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸைக் கோரியது. பிரெவிஸை விடுவிக்க சென்னை அணி விரும்பாததால், பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2025 ஐபிஎல் தொடரில் காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக சென்னை அணியில் டிவால்ட் பிரெவிஸ் இணைந்துகொண்டார்.
கிடைத்த வாய்ப்புகளில் தனது அதிரடி துடுப்பாட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இதனால் பிரெவிஸின் ஆட்டம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், பிரெவிஸ்ஸை விட்டுக்கொடுக்க சென்னை அணி விரும்பிவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
