இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘தருன்’ என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவை கொல்ல துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த சட்டத்தரணி வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி சட்டத்தரணி அடையாள அட்டை, சட்டத்தரணிகளுக்கான வாகன நுழைவு அனுமதி மற்றும் இரண்டு சட்டத்தரணி டைகளையும் வழங்கியது தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி கெஹல்பத்தர பத்மேவுக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான தருனுக்கும் இடையே சிறிது காலமாக உறவுகளைப் பேணி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த உறவுகளின் அடிப்படையில், பத்மேவின் ஆலோசனையின் பேரில், இந்த சட்டத்தரணி சஞ்சீவவின் கொலைக்கு உதவ முன்வந்துள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தருனின் அறிவுறுத்தலின் பேரில், இந்த சட்டத்தரணி இஷாரா செவ்வந்தியைச் சந்தித்து சஞ்சீவவின் கொலைக்குத் தேவையான வசதிகளை வழங்கினார்.
அதன்படி, சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு ரகசியமாக எடுத்துச் செல்ல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. கொலையாளி இந்த பிரதிகளில் ஒன்றின் உள் பக்கங்களை வெட்டி, சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக துப்பாக்கியை அதில் மறைத்து வைத்திருந்தார்.
மேலும், இஷாரா செவ்வந்தி நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கு சட்டத்தரணிகள் சங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைய சட்டத்தரணிகளுக்கு வழங்கப்படும் வாகன நுழைவு அனுமதிச் சீட்டையும் இந்த சட்டத்தரணி செவ்வந்திக்கு வழங்கியது தெரியவந்துள்ளது.
கொலையைச் செய்த கொமாண்டோ சாலிந்து சட்டத்தரணி உடையை அணிய தேவையான இரண்டு டைகளையும் செவ்வந்திக்கு இந்த பெண் சட்டத்தரணி கொடுத்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவரை 72 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
சஞ்சீவ கொலைக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த சட்டத்தரணி குறித்த தகவல்கள் வெளியாகின.
அதன்படி, கடவத்தை பகுதியில் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, நேற்று முன்தினம் (28) இரவு இந்த சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, பத்மேவும் அவரது கும்பலும் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது தருன் துபாயில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் தருன் துபாயில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
