’13’ஐ அமுல்படுத்த வலியுறுத்துவோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

’13’ஐ அமுல்படுத்த வலியுறுத்துவோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

‘1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் மீளவும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும். அதை வலியுறுத்துவோம். மாகாண சபை தொடர்பில் மிகப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஓர் ஒற்றுமைப்பாடும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இன்னும் ஒருவரும் மிகுதி இல்லாமல், அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்லும் முயற்சியாகத்தான் கலந்துரையாடல் நடைபெற்றது’ என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு,”ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலே ஒரு தொடர் கருத்தரங்குகளை வடக்கு, கிழக்கில் நடத்தி வருகின்றது. தமிழர் தரப்பில் இருக்கக்கூடிய ஏனைய தரப்புக்களும் இதற்குள் வந்து இணைய வேண்டும் என்பது எமது எல்லோரதும் விருப்பம். அது, தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருக்கலாம். ஏனைய கட்சிகளாக இருக்கலாம். இவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு போக வேண்டும் என்பதில் எங்களுக்குள் ஒருமித்த கருத்து இருக்கின்றது.

ஏற்கனவே வவுனியாவில் இடம்பெற்ற கருத்தரங்கில் எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் மாகாண சபைத் தேர்தல், மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பாக ஒரு ஒருமித்த கருத்தில் இருக்கின்றார்கள் என்பது தெளிவானது. இருந்தபோதும் ஒரு கூட்டாக வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்லாமக் ஏனைய பிரதேசங்களிலும் முன்னெடுத்துக் கொண்டு போக வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் அரசு தேர்தலை நடாத்தாமல், மாகாணங்களுக்குள் எல்லைகளை பிரித்து, அதற்கு பின்புதான் தேர்தல் என்ற ஒரு தொனி தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு நடக்குமாக இருந்தால் தேர்தல் காலவரையின்றி பிற்போடலாம் என்ற ஓர் அச்சம் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்றது. ஆகவே இதனை மாற்றி, தேர்தலை குறைந்தபட்சம் வரும் வருடத்தின் ஆரம்பத்திலேனும் வைக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் – அதாவது 1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் – மீளவும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும்.

இந்த அரசுக்கும் நாங்கள் ஒரு தெளிவான கருத்தை சொல்லியிருக்கின்றோம். ஜனநாயக ரீதியாக ஏற்கனவே இந்த நாட்டில் அரசியல் சாசனத்தில் இந்த அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்தமட்டில் கடந்த 7, 8 வருடங்களாக நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக அந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அந்த அதிகாரங்கள் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் வசம் கொடுக்கப்பட வேண்டும். அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் மிகத் தெளிவாக அரசை கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். ஆகவே அந்தவகையில் மிகப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமைப்பாடும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இன்னும் ஒருவரும் மிகுதி இல்லாமல் அனைவரையும் இணைத்துக்கொண்டு முன் நகர்த்தும் முயற்சியாகத்தான் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் விக்னேஸ்வரனுடனும் பேச ஆலோசித்துள்ளோம்” என்றார்.

Share This