சிறுபான்மை அதிகார அரசியலும் : ரவூப் ஹக்கீமின் அவசியமும்

இலங்கை அரசியலில் சிறுபான்மைச்சமூகங்களின் பிரதிநிதித்துவமும் அதன் தலைவர்களின் நிலைப்பாடும் எப்போதும் கூர்மையான விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அண்மைய அரசியல் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிலரது விமர்சனங்களையும் பலரது ஆதரவுக்குரல்களையும் ஒரு சேர எழுப்பியுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவர் சுட்டிக்காட்டும் போது, ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவதும் அரசாங்க ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இச்சூழலில், கடந்த கால நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு ஹக்கீமின் அரசியல் நிலைப்பாட்டின் நியாயத்தன்மையையும் எதிர்காலத்தேர்தல் களத்தில் அதன் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தையும் பார்ப்போம்.
ஒரு பலமான ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி அல்லது ஆளுங்கூட்டணிக்கு வெளியே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது அல்லது மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்துவது ஒரு அத்தியாவசிய கடமையாகும்.
ரவூப் ஹக்கீம் மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்கும்போதெல்லாம் அவருக்கெதிராக ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகப் பதிலடி கொடுப்பது ஒரு வழக்கமான காட்சியாக மாறியுள்ளது.
இக்கண்டனங்கள் பெரும்பாலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பேசுவதை விட, ஹக்கீம் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதிலேயே கவனஞ்செலுத்துகின்றன.
இது, சிறுபான்மைச்சமூகத்தின் உரிமைகளுக்காக உண்மையாகக் குரல் கொடுப்பவர்களை மௌனிக்கச் செய்யும் அல்லது அவர்களைச் சமூகத்திலிருந்து பிரித்துக்காட்டும் ஆளுங்கட்சியின் தந்திரோபாயமாகவே பார்க்கப்பட வேண்டும்.
தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு தலைவரைத்தனிமைப்படுத்துவதன் மூலம், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களின் தாக்கத்தைக் குறைக்கவும் தமது விசுவாசத்தை பெரும்பான்மை அரசியல் தலைமைக்கு நிரூபிக்கவும் முயல்கிறார்கள். இருப்பினும், இந்த அரசியல் நாடகம் வாக்காளர்கள் மத்தியில் உண்மையான தலைமை யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது.
ரவூப் ஹக்கீமின் விமர்சனங்களைப் புறக்கணிக்கும் ஆளுந்தரப்பினரும் சமூக வலைத்தள விமர்சகர்களும் ஒரு முக்கியமான அரசியல் நிதர்சனத்தை மறந்து விடுகிறார்கள். எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவும் தேவையற்றதென்று ஒரு போதும் கூற முடியாது.
கடந்த காலங்களில், தற்போதைய ஜனாதிபதி உட்பட பல முக்கிய தலைவர்கள் குறிப்பாக, அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான கட்சி, ரவூப் ஹக்கீம் அவர்களைத் தேடிச்சென்று சந்தித்து, ஆலோசனை கேட்டதும் ஆதரவு கோரியதும் பகிரங்கமான உண்மையாகும்.
இவ்வாறான ஆதரவுகளைக்கோருவதற்கு முன்பே தேர்தல் காலங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சித்திருந்தாலும் தேவை உணரப்படும் போது தேடிச்செல்வார்கள் என்பதற்கு இத்தகைய நிகழ்வுகளை உதாரணங்களாகப் பார்க்கலாம்.
இத்தகைய நிகழ்வுகள், ஹக்கீமின் அரசியல் செல்வாக்கையும் சிறுபான்மைச்சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் அவரது திறனையும் ஆழமாக அங்கீகரிக்கின்றன.
அரசியல் என்பது நிரந்தர நண்பர்களோ அல்லது நிரந்தர எதிரிகளோ இல்லாததொரு களம். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பலதரப்பட்ட சக்திகளின் ஆதரவு தேவைப்படும். கடந்த காலத்தில் எதிர்த்தவர்கள், அதிகாரத்தின் தேவைக்காக ஆதரவு தேடி வந்ததற்கும் வருங்காலத்திலும் அவ்வாறு வரக்கூடியதற்கான வாய்ப்புகளுக்கும் இச்சந்திப்புகள் அசைக்க முடியாத ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
அண்மையில் நடைபெற்ற கூட்டுறவுச்சங்க தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு எந்த நிலையிலுள்ளது என்பதைக் கோடிட்டுக்காட்டின. சில இடங்களில் ஓர் ஆசனத்தைக் கூடப்பெற முடியாமல் போனமை இந்த அரசாங்கத்தின் பலவீனத்தையும் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மேலும், பெரும்பான்மைச்சமூகத்தின் வாக்குகள் கூட உள்ளூராட்சித்தேர்தலில் குறைந்திருப்பது, அடுத்து வரவிருக்கும் தேசியத்தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்தேர்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் வெற்றிக்கு மிகப்பாரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையின் தேசியத்தேர்தல்களில் வெற்றி பெற 2019 மற்றும் 2020 தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டது போல, வெறும் பெரும்பான்மைச்சமூகத்தின் வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு எளிதில் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது.
ஒரு வலுவான தேசிய வெற்றிக்கு சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு அத்தியாவசியமான ஒன்றாகும். சிங்கள மக்களின் வாக்குகளில் வீழ்ச்சியைக்காணும் நிலையில், இந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்பட்டால், நிச்சயமாக அது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை நாடித்தான் ஆக வேண்டும்.
ரவூப் ஹக்கீமின் முக்கியத்துத்தையும் சிறுபான்மை வாக்குகளின் பலத்தை நன்கறிந்த அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கும் போது, தங்கள் விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு ரவூப் ஹக்கீமின் கதவுகளைத்தட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும்.
இது, ரவூப் ஹக்கீம் தனிப்பட்ட முறையில் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும் அரசியல் களம் அவரை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக அங்கீகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.
உதாரணமாக, கடந்த காலங்களில் எதிர்த்த அரசியல்வாதிகள் கூட, தேர்தல் சமயத்தில் சிறுபான்மை வாக்கு வங்கியை தம் பக்கம் திருப்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நாடியுள்ளனர். அதேபோல், எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைத் தலைவர்கள் இருப்பார்கள்.
அனுரகுமார திசாநாயக்க போன்ற தலைவர்கள் தமது அரசியல் அறிவால், அனைத்துத்தரப்பினரின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே செயற்படுகிறார்கள்.
ஆனால், அவர்களை ஆதரிக்கும் சிலர் ஆழமான அரசியல் அறிவின்றி, தற்காலிக உணர்ச்சிவசப்பட்டு சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அதே தலைவர்கள் ஹக்கீம் அவர்களைச் சந்திக்கும் போது, தாம் முன்பு விமர்சித்ததற்காக ஏமாற்றமடையப் போகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.
ரவூப் ஹக்கீம் மீதான விமர்சனங்கள், தற்காலிக அரசியல் இலாபத்திற்காகவும் அதிகாரத்தரப்பினரின் விசுவாசத்தை நிரூபிக்கவும் செய்யப்பட்டாலும் அவர் எழுப்பும் மக்கள் பிரச்சினைகள் உண்மையானவை.
இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், எந்த அரசாங்கமாக இருந்தாலும், ஆட்சியைத் தக்கவைக்கச் சிறுபான்மைக்கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை உணர முடியும். உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் இத்தேவையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எனவே, விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ரவூப் ஹக்கீம் அவர்களின் அரசியல் நகர்வு சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகளை ஒரு பேரம்பேசும் சக்தியாக நிலைநிறுத்துவதாகும். காலம் வரும் போது, இன்று அவரைக்குறை சொல்பவர்களும் புறக்கணிப்பவர்களும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தவிர்க்க முடியாத தேவைக்காக, அவரது ஆதரவைத்தேடி நிற்பார்கள் என்பது அரசியலின் அடிப்படைக்கோட்பாடாகும்.
சிறுபான்மைத்தலைவர்களை விமர்சிப்பவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களின் நீண்டகால வியூகத்தையும் தேர்தல் காலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். சிறுபான்மை ஆதரவென்பது அதிகார அரசியலில் ஒரு அச்சாணி என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
(ஆக்கம் – எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) , ஓட்டமாவடி)