யார் இந்த இஷார செவ்வந்தி!! 237 நாட்களுக்கு பின் நேபாளத்தில் கைது

யார் இந்த இஷார செவ்வந்தி!! 237 நாட்களுக்கு பின் நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி மற்றும் நான்கு சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் தப்பி ஓடிய 237 நாட்களுக்குப் பின்னர் இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஏனைவர்களில் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேபாள பொலிஸார் நடத்திய நடவடிக்கையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் காண உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் நேபாளம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ரோஹன் ஒலுகலவும் ஒருவர் ஆவார்.

பெப்ரவரி 19ஆம் திகதி காலை 10 மணியளவில், திட்டமிட்ட குற்றக் கும்பல் குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணி போல் மாறுவேடமிட்ட நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பூசா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட சஞ்சீவ, நீதிமன்ற கூண்டில் ஏறிய பின்னர, சட்டத்தரணி போல் வேடமிட்ட நபர் அவருடன் பேசுவது போல் எழுந்து நின்று 9 மிமீ துப்பாக்கியால் அவரது தலையிலும் மார்பிலும் ஆறு முறை சுட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நீதிமன்ற வளாகத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

எனினும் அதே நாளில் மாலை 4.30 மணியளவில் புத்தளம் பகுதியில்உள்ள சோதனைச் சாவடியில் வைத்து வான் ஒன்றில் தப்பிச் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

34 வயதான சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார், மேலும் அவர் ஒரு முன்னாள் கமாண்டோ சிப்பாய் ஆவார். அவர் பயணித்த வானின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சட்டப் புத்தகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு நீதிமன்றத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு, கட்டுவெல்லேகமவைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற 25 வயது யுவதி பிரதான சந்தேக நபரிடம் துப்பாக்கியை கொண்டுவந்து கொடுத்திருந்தார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதும் இராஷா செவ்வந்தி தப்பிச் சென்றிருந்தார். அவரை கைது செய்ய எடுக்கப்பட்டிருந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்திருந்தன.

இதனால், இஷார செவ்வந்தியை கைது செய்ய 14 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவர் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வானின் சாரதி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி, இஷார செவ்வந்தியின் சகோதரர் மற்றும் தாயார் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

கொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவும் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பின்னணியிலேயே இஷார செவ்வந்தி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This