போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியள்ளார்.

“அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இது ஒரு சிறப்பான நாள். அமைதிப் பேச்சுக்குத் துணையாக இருந்த கத்தார், எகிப்து, துருக்கிக்கு நன்றி,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை கடந்த வாரம் டிரம்ப் வெளியிட்டார்.

இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த இருதரப்பினருக்கும் இடையிலான போர் அண்டைய நாடுகளுக்கும் பரவிய நிலையில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களாக எகிப்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர்களுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது.

எனினும், இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்வதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This