தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து கம்பனிகள் அறிவிக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து கம்பனிகள் அறிவிக்க வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 9 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிக்க வேண்டும். தொழில் அமைச்சும், பெருந்தோட்ட அமைச்சும் இணைந்து கம்பனிகளுடனான இணக்கப்பாட்டின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க முயற்சிப்பதாக பிரதித் தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஹட்டன் மாவட்ட தொழில் அலுவலகத்தில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், ‘தொழில் அமைச்சும், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சும் இணைந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.

கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி இறுதியாக பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

தற்போது 1350 ரூபா நாட்சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலதிக கிலோ ஒன்றுக்கு 50 ரூபா வழங்கப்படுகிறது. இம்மாதம் 9 ஆம் திகதி அடுத்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

ஒரு மாத காலத்துக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்த தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கம்பனிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் யாருக்கும் உத்தரவிடவில்லை. கம்பனிகள், தொழிற்சங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கடந்த காலங்களில் இவ்வாறு பல்வேறு நிறுவனங்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த கால அறிக்கைகளை பார்க்கும்போது பெருந்தோட்டத்துறையில் வருமானம் அதிகரித்துள்ளமையை தெளிவாகக் காண முடிகிறது.

எனவே தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை. மாறாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியவில்லை எனில் அது யாருடைய தவறாகும்? அதற்கான நடவடிக்கைகள் கம்பனிகளாலேயே எடுக்கப்பட வேண்டும்.

எனவே தான் அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. பலவந்தமாக நாம் எதையும் பெற முயற்சிக்கவில்லை. சம்பள பிரச்சினைக்கு அப்பால் பெருந்தோட்டத்துறையில் மேலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினையும் நீண்டகாலமாக காணப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் படிப்படியாக தீர்க்கப்பட வேண்டும்’ என்றார்.

Share This