ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன – தயாசிறி கேள்வி
2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்த அரசியல்வாதிகளில் பெயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட எவரும் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்து நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.
2019 ஆம் ஆண்டு இருதய சத்திரசிகிச்சைக்காக சுமார் 4 லட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டேன். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிதியுதவிக்கு அனுமதியளித்திருந்தார்.
ஜனாதிபதி நிதியத்தினூடாக முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஏனைய செலவிற்கு தனிப்பட்ட நிதியையே பயன்படுத்தினேன்.
ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி பல்வேறு அரசியல்வாதிகளுக்கு எதிரான தவறான பிரசாரங்கள் தடுக்கப்பட வேண்டும். தவறான கூற்றுக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெறுவது தவறு என்றால், நிதி தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ காரணங்களுக்காக பணம் கோரப்பட்டுள்ளதாக கூறிய அவர் பாரியளவான தொகைகள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட என்றும் கேள்வி எழுப்பினார்.