நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 6500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், திருடுபவர்களை கைது செய்வதற்கு 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மனதுங்க தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கொழும்பு நகரில் போக்குவரத்தை கையாள்வதற்கு மாத்திரம் சுமார் 600 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பண்டிகைக் காலங்களில் ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யச் செல்லும் போது மக்கள் தமது பணம், கையடக்கத் தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் போன்றவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென புத்திக மனதுங்க தெரிவித்தார்.