மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்

நாட்டில் மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இதில் கொழும்பு மாவட்டம் முதன்மையானது எனவும், அதே நேரத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி தெரு, அங்குலான, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஹிக்கடுவ உள்ளிட்ட பல நகரங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மாணவர்கள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தில் சில பகுதிகள் பாடசாலை மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் போதைப்பொருள் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது, பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டாதது ஆகியவை மாணவர்கள் போதைப்பொருட்கள் பாவனைக்கு வழிவகுத்த காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மன அழுத்த சூழ்நிலைகள், மாணவர்களை புறக்கணித்தல், குடும்பம் மற்றும் பகுதியில் போதைப்பொருட்களின் பரவல், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க, ஆபத்தான மருந்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய சபை ஆறு பிரிவுகள் மூலம் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அவற்றை சர்வதேச தரத்தின்படி உள்ளூர்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.