இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நாமல் எம்.பி சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.
இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில், உயர் ஸ்தானிகரை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“எங்கள் நீண்டகால நட்பையும் இந்தியாவுடனான வலுவான இருதரப்பு உறவுகளையும் பெரிதும் மதிக்கிறது” என்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது, உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய மாளிகையில் நாமல் ராஜபக்சவை வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் “பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை” ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.