செயற்கை நுண்ணறிவு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு நேற்று (12) அலரி மாளிகையில் நடைபெற்றது.
‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் அரசாங்க அமைச்சுகளின் நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச சேவை டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், அதற்காக தற்போதுள்ள அரச சேவை மாற வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க இங்கு தெரிவித்தார்.
அரச சேவை தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான சவாலை வெற்றிகொள்வதற்கு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இந்த செயலமர்வில் பிரதான உரை நிகழ்த்தியதுடன், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க, சமிச அபேசிங்க ஆகியோருடன் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த செயலமர்வில் வளவாளர்களாக பங்களித்தனர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம திஸாநாயக்க ஆகியோருடன் அனைத்து அரச ஆணைக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள், மேல் மாகாண சபை மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.