பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் – சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பேரவையின் கருத்தைக் கருத்தில் கொள்ளாமல் மகிந்த ராஜபக்ச இந்த போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், போர்நிறுத்தத்தை அறிவித்தமைக்காக காரணத்தை மகிந்த விளக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
மினுவங்கொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அடிக்கடி கூறினாலும், போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை தெளிவாகக் கூறுமாறு மகிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுகின்றேன்.
மகிந்த ராஜபக்ச ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். பாதுகாப்பு பேரவையில் நாங்கள் வேண்டாம் என்று சொன்னோம்.
எனினும், எங்களின் பேச்சை மீறி 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தார். அந்த போர் நிறுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் எங்களை ஒழுங்கமைத்து தாக்கினர்.
எமது இராணுவம் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் பின்வாங்கியது. சுமார் ஐநூறு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த போர் நிறுத்தம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் தப்பி ஓடக் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சோல்ஹெய்ம் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இருப்பினும், தப்பி ஓடுவதற்குப் பதிலாக, பிரபாகரன் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்புப் படைகளைத் தாக்கினார்.
ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அடிக்கடி கூறினாலும், போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை மகிந்த தெளிவாகக் கூறு வேண்டும் சவால் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.