மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன் – யாழில் ஜனாதிபதி சூளுரை

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இனவாதத்தின் அடிப்படையில் வடக்கையும், தெற்கையும் குழப்பும் வகையில் சில அரசியல்வாதிகள் திட்டமிட்டுகொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே எந்தவொரு இனவாத அரசியலுக்குள்ளும் சிக்கி இரையாக வேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பதித்து வைத்த பின்னர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
பிரிந்திருந்த நாட்டு மக்களை கடந்த கால ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல்கள் ஒன்றிணைத்துள்ளது. இனி ஒருபோது நாட்டு மக்கள் பிரிந்திருப்பதற்கு அனுமதிக்க முடியாது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலைநாடு என பிரிந்திருக்காமல் ஒரு நாட்டு மக்களாக வாழவேண்டும். அதற்காக அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், வடக்கு மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து நாங்கள் விஷேடமாக அவதானம் செலுத்தியுள்ளோம்.
வடக்கில் அதிகளவான விவசாய தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
யுத்தம் காரணமாக பாரிய அளவிலான காணிகளை படையினர் கைப்பற்றி முகாம்களை அமைந்திருந்தனர். இனிநாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான சூழல் இல்லை.
யுத்தம் வரும் என்ற நோக்கத்துடன் அந்த காணிகளை இனி வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
கடந்த கால அரசாங்கங்கள் மீண்டும் ஒரு யுத்தம் வருமென எண்ணி அந்த காணிகளை வைத்திருந்தன.
இந்நிலையில், திறந்துவிடக்கூடிய அனைத்து வீதிகளையும், விடுவிக்க வேண்டிய அனைத்து காணிகளை நாங்கள் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம்.
அதேபோல், வடமாகாண மீனவர்களின் பிரச்சினை குறித்தும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். அதற்காகவே மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளோம்.
மேலும், தமிழக மீனவர்களிடம் இருந்து எமது கடற்பரப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அந்த வகையில் கச்சத்தீவை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
இன்று மாலை கச்சத்தீவிற்கு சென்று அங்குள்ள மீனவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன். எமது நாட்டின் நிலம், கடல், வானம் என அனைத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது எங்களின் தார்மீக பொறுப்பாகும்.
எமது நிலம், கடல் மற்றும் வான்பரப்பிற்கு அச்சுறுத்தைலை ஏற்படுத்தும் எந்தவொரு சக்திக்கும் நாம் அடிப்பணியப் போதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.