வேலணையில் விசமிகள் தீவைப்பு – திணறும் அதிகாரிகள்

வேலணையில் விசமிகள் தீவைப்பு – திணறும் அதிகாரிகள்

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடிய கட்டுப்படுத்தினர்.

இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறிவருகின்றனர்.

பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளி நாடுப் பறவைகள் அதிகளவில் வருகை தரும், அவை தமது இனப்பெருக்கங்களை செய்வதும் வழமை.

இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளது

இதேநேரம் இவ்வாறு தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This