பணிக்கு திரும்ப தபால் ஊழியர்கள் இணக்கம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுடன் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த தபால் ஊழியர்கள், தொடர்புடைய ஒப்பந்தங்கள் குறித்து எழுத்துப்பூர்வ பதில் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தனர்.
“இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அஞ்சல் மா அதிபர் எங்களுக்கு எழுத்துப்பூர்வ பதிலை வழங்க வேண்டும். சில விடயங்களில் ஒப்பந்தங்கள் உள்ளன. ஆவணமாக வழங்கப்பட்ட பிறகு நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த ஆவணத்துடன், வேலைநிறுத்தம் குறித்து இறுதி முடிவை எடுப்போம்.” என்றனர்.
தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்களின் 19 கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த 17 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று 7வது நாளாக தொடர்கிறது.
பணிபுறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தபால் சேவைகளைப் பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.