மீண்டும் களத்திற்கு திரும்பும் விராட் கோலி – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக லண்டன் – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒரு தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் விராட் கோலியும் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
இது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 போட்களில் இருந்தும் விராட் கோலி ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், லண்டனில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் கோலி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்காக தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக லார்ட்ஸ் மைதானத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.