அச்சுறுத்தும் அமெரிக்கா – இந்தியா வருகின்றார் புடின்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்துள்ள நிலையில், போர்நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்பை அறிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் முடிவில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை.
இதையடுத்து, குறிப்பிட்ட இந்திய பொருட்களுக்கு இனிமேல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், விளாடிமிர் புடின் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த மாத இறுதியில் சீனாவில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணம் உறுதி செய்யப்பட்டால், 2019க்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு மேற்கொள்ளும் பயணமாக இது இருக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.