மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை நுவரெலியா நீதவான் லங்காகனி பிரபூத்திகா முன்னிலையில் (04) ஆஜர்படுத்தப்பபட்ட பின்னர், சந்தேக நபரான சாரதியை இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்புக்கு ஏராளமான பயணிகளுடன் சென்ற திவுலப்பிட்டிய டிப்போவிற்குச் சொந்தமான குறித்த பேருந்தை நுவரெலியாவின் சீதாஎலிய பகுதியில் நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் நேற்றைய தினம் (3) நிறுத்தி சோதனை செய்தபோது, சாரதி குடிபோதையில் இருப்பதை உறுதிசெய்த பின்னர், சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பேருந்து சாரதி இருக்கையின் பின்புறம் சாரதி பயன்படுத்திய போத்தலில்  மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சாரதியான அசங்க சஞ்சீவ பிரியதர்ஷன (வயது47) திவுலப்பிட்டிய – மெதகம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சாரதி மீது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )