யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். எனினும், வழக்கை விசாரிக்கும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று வருகைதரவில்லை.

நீதிபதி விடுமுறையில் இருந்ததால் இன்று வருகைதரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கை அக்டோபர் 29ஆம் திகதிக்கு மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரால் பராமரிக்கப்பட்ட 59 மில்லியன் ரூபா கூட்டுக் கணக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் டெய்சி ஃபாரெஸ்ட் சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.

சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மார்ச் 31, 2009 முதல் டிசம்பர் 12, 2013 வரை மூன்று தனியார் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் 59 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share This