எஸ்.எம். சந்திரசேனவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டது.
2014 ஆம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிப்பதற்காக 25 மில்லியன் ரூபாய் செலவில் வாங்கிய சோள விதைகளை சட்ட நடைமுறைக்கு மாறாக, தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே விநியோகித்ததன் மூலம் ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த முறைப்பாட்டை அழைத்த போது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பல விவசாய அதிகாரிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கேற்ப பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரப்பட்டது.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமிந்த அதுக்கோரல, சந்தேக நபர் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக எந்த முறைப்பாடும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, சந்தேக நபர் தகுந்த நிபந்தனைகளின் பேரில் பிணைக் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்தார்.
சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
பின்னர், இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.