கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்மேல் பருவமழை தீவிரமடைந்து வருவதால், இம்மாதம் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை , மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் பலத்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று அதிகாலை முதல் வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது