அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்

அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கருடன் நடைபெற்ற சந்திப்பின் காட்சிகளை வெளியிட நாடாளுமன்றம் முற்றிலுமாக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றின் இந்த நடவடிக்கையானது நமது அடிப்படை தகவல் அறியும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான தகவல்களை இவ்வாறு ரகசியமாக மறைப்பது வெளிப்படைத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும், பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு ஜனநாயக சமூகத்தில், வெளிப்படைத்தன்மை என்பது வெறும் ஒரு விருப்பமல்ல – அது ஒரு கட்டாயமாகும்.

இந்த காட்சிகளை வெளியிட மறுப்பது நமது ஆளும் நிறுவனங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அவற்றின் உறுதிப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த காணொளியை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், வடக்கு மாகாணத்திற்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This