புதிய உலகை நோக்கி நகரும் சீனா – முதலில் சிறு விளக்கம்

புதிய உலகை நோக்கி நகரும் சீனா – முதலில் சிறு விளக்கம்

ஈழத்தமிழர்கள் உட்பட உலகில் உள்ள அரசு அற்ற தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் விவகாரத்தில் சீனா ஒத்துழைக்காது. வெளிப்படையாகவே சொல்லியுமுள்ளது சீனா.

ஆகவே ”ஜனநாயகம்” ”நல்லிணக்கம்” என்று மார் தட்டிக் கொண்டு இன அழிப்பில் ஈடுபடும் அரசுகளுக்கு ஒத்துழைக்கும் மேற்கு – ஐரோப்பிய நாடுகள், சீனாவின் நவீன தொழில்நுட்பங்களை எப்படி எதிர்கொள்ளும் என்பது மாத்திரமே இப் பதிவின் உள்ளடக்கம்.

எழுதி வைத்த சர்வதேச சட்டங்கள் – அரசியல் கோட்பாடுகள் போன்றவற்றை மேற்கு – ஐரோப்பிய நாடுகள், ஏனைய நாடுகள் மீதும், அரசியல் விடுதலை கோரும் அரசு அற்ற சிறிய தேசிய இனங்கள் மீதும் திணித்து வருகின்றன.

ஆனால் சீனா, சர்வதேச சட்டங்கள், மேற்கத்தைய கோட்பாடுகளை விடவும், நவீன தொழில்நுட்ப தேடல்கள் ஊடாக ”புதிய கொள்கைகள்” – ”புதிய சிந்தனைகள்” போன்றவற்றை உருவாக்கி வருகிறது.

சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 18 நாட்கள் இடம்பெற்ற ஊடகத் தொடர்பாடல்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பங்கு பற்றியிருந்தேன். அங்கு பல விஷயங்களை என்னால் உணர முடிந்தது.

கருத்தரங்கில் விளக்கமளித்த, பிஜிங் சூக்ஸியர் பிலிமிங்க ரெக்நோலஜி நிறுவனத்தின் பொது முகாமையாளர் சாங் யான்வீ, (Zheng Yanwei – General Manager. Bejiing Zooxer Filming Technology Co Ltd) ஜனநாயகம் – ஊடக சுதந்திரம் பற்றி விளக்கம் ஒன்றை நுட்பமாக விபரித்தார்.

மேற்கு – ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் ஜனநாயகம் வேறு என்றும், மக்களுக்குரிய தேவைகளின் அடிப்படையிலான சிந்தனைகளை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவதை ஜனநாயகமாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற தொனியில் அவருடைய அந்த விளக்கம் அமைந்திருந்தது.

சீனாவின் ஊடக் கொள்கை பற்றி பல கற்பிதங்களை எடுத்துக் கூறினார்.

இந்த இடத்திலேதான் நான் ஒரு கேள்வியை அவரிடம் தொடுத்தேன்.

அதாவது, ஜனநாயகம் – ஊடக சுதந்திரம் சீனாவில் இருக்கிறதா அப்படி இருந்தால் சீன ஊடக கொள்கையோடு ஒப்பிட்டு விரிவாக்கம் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தேன். அத்துடன் அது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன என்றும் நான் மீண்டும் கேள்வி தொடுத்திருந்தேன்.

இலங்கையில் இருந்து சென்ற தமிழ் – சிங்கள பத்திரிகையாளர்களுடன் மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் தென் ஆபிரிக்க பத்திரிகையாளர்களும் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த விடயதானத்துக்கு அப்பால், நான் கேள்விகளை தொடுக்க விரும்பவில்லை.

சட்ட வியாக்கியானத்தைவிட சீனக் கோட்பாடுகள் – கொள்கைகள் என்பவற்றுக்கு சாங் யான்வி முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

ஜனநாயகம் என்பது விரிந்த – நீண்ட ஒரு மேற்கத்தைய கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு புரிதல்களுடன் பின்பற்றும் ஒரு முறைமை உண்டு.

இப் பின்புலத்தில், சீனாவின் ஜனநாயகம் – ஊடக சுநத்திரம் தனித்தன்மை மிக்கது என்ற அர்த்தம் சாங் யான்வியின் குரல் தொனியில் தெரிந்தது. சீன அரசியல் – பொருளாதாரப் பின்னணிகளுக்கு ஏற்ற முறையில் அந்தப் பதில் அமைந்திருந்தது.

இந்த இடத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா நகரில், 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது ஜோ பைடனை சந்தித்து பேசிய விடயம் ஒன்று அப்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

அதாவது, அமெரிக்காவின் ஜனநாயகம் அமெரிக்கப் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று சீன ஜி ஜின்பிங், பைடனிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

President Joe Biden and China’s President President Xi Jinping walk in the gardens at the Filoli Estate in Woodside, Calif., Wednesday, Nov, 15, 2023, on the sidelines of the Asia-Pacific Economic Cooperative conference. (Doug Mills/The New York Times via AP, Pool)

இதன் அடிப்படையில், அமெரிக்கா, சீனாவிடம் அவ்வப்போது வரிந்துகட்டும் ஜனநாயகம் பற்றிய கருத்தியலுக்கு சீனாவின் உண்மை நிலைப்பாடு என்பதை அறியவே சாங் யான்வியிடம் நான் அந்தக் கேள்வியை முன்வைத்திருந்தேன்.

அதேநேரம் இலங்கை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான சட்டத்தரணி சாமர நாணயக்காரவசம் (Chamar Nanayakkarawasam) ஊடகங்களில் ஆக்கபூர்வமான விமர்சனத்தை (Constructive Criticism) சீனா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தார்.

ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்பதாக சாங் யான்வி பதிலளித்தார்.

இக் கருத்தரங்கில் நான் புரிந்து கொண்ட விடயங்கள் .

1) ”மாற்றுத் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு” – ”புதிய வளர்ச்சி“ ஆகியவற்றில் எவருமே அறிய முடியாத சீனாவின் ஆழமான புதிய – நவீன வகிபாகம்.

2) மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சீனா பற்றிய அவதானிப்புகளை குறிப்பாக ஜனநாயகம் பற்றிய அழுத்தங்களுக்கு ”நவீன தொழில்நுட்ப மாற்றங்கள்” – ”எட்டித் தொட முடியாத வளர்ச்சிகள்” மூலம் சீனக் கொள்கைகளை நியாயப்படுத்தும் முறை.

3) AI தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியத்துவமும் அதன் மூலம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள கூடிய மாற்று திட்டங்கள் – எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் மாற்று வியூகங்கள்.

3) இதன் காரண – காரியத்தால் சீனாவை நோக்கி மேற்கு நாடுகள் கைநீட்டக் கூடிய சதி அரசியலுக்கு (Conspiracy Politics) அமைதியாக நியாயப்படுத்தக் கூடிய – மாற்றுத் தொழில்நுட்ப தேடல்கள். (Alternative Technology Searches)

4) சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்தின் ஒரு பகுதியான சுதந்திரம் மனிதாபிமானம் எல்லாமே ”மனித நேயத்தின் அங்கங்கள்”என்பதை விஞ்ஞான ரீதியில் நிறுவக்கூடிய சமகால சீன உள்ளக நவீன அபிவிருத்திகள். அதாவது, மக்கள் அமைதியாக வாழக்கூடிய வசதிகள் – வாய்ப்புகள் – சந்தர்ப்பங்கள் உயர் தரத்தில் காணப்படுகின்றன.

5) AI தொழில்நுட்பத்தின் மூலம் பிரதான ஊடகங்களின் வளர்ச்சியில், புதிய மாற்றங்களை உள்வாங்குதல் – உருவாக்குதல்.

6) புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல். குறிப்பாக இள வயது இளைஞர்கள் – பெண்கள் பணியாற்றும் சிந்தனை மையம் (Idea Center) மிக முக்கியமானது. இதை மூளை உருவாக்க நிலையம் என்று அழைத்தாலும் பொருந்தும்.

Idea Center பல தன்மைகளைக் கொண்டது.

A) ஒருங்கிணைப்பு நிரல்கள் (Integration Programmes)

B) நோக்குநிலை மற்றும் பழக்கவழக்க திட்டங்கள் (Orientation and Familiarisation Programmes)

C) இன சிறுபான்மை இளைஞர்களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் (Dedicated Programmes for Ethnic Minority Youths)

D) இன சிறுபான்மை பராமரிப்பு குழு (Ethnic Minority Care Team)
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக போரில் தமது கவனத்தை செலுத்தி பொருளாதார இழப்புகளையும் சந்தித்து மனித நேயத்தை சீரழித்து பின்னர் மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றியும் சும்மா ஒப்பாசாரத்துக்காக வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சீனா, எந்தவிதமான ஆர்ப்பரிப்பின்றி, வேறொரு புதிய உலகத்தை நோக்கி அமைதியாகச் சென்று கொண்டிருக்கிறது.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

Share This