1000 கொள்கலன்கள் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

1000 கொள்கலன்கள் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

சுங்க பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, இதற்கு முன்பு 14 சந்தர்ப்பங்களில் சுமார் 1000 கொள்கலன்கள் சுங்க பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்தக் கொள்கலன் வெளியீடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதா? அல்லது அரசாங்கத்திற்கு ஏதேனும் நிதி இழப்பை ஏற்படுத்தியதா? என்பதைத் தீர்மானிக்க தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தணிக்கைக்குப் பிறகு, இந்த விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார்.

ஐந்து அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டிருநு்ததுடன், துணை திறைசேரி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன இதற்கு தலைமை தாங்கியிருந்தார்.

இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த 323 கொள்கலன்களையும் விடுவித்தமை குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது குறித்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

Share This