பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்று இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது.

கல்லுண்டாய்வெளியில் அவ்வப்போது தீ ஏற்படுவது இயல்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், நேற்று இரவு ஏற்பட்ட தீ இதுவரை பதிவான சம்பவங்களில் மிகப்பெரியது என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள் சகிதம் தீயைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல மணிநேரம்வரை தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

கல்லுண்டாய்வெளியில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்துவரும் பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகள் சகிதம் இரவிரவாக வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், தமது உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

சுவாசப் பிரச்சினைகள் உடையவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்வகையில் புகையின் தாக்கம் நிலவியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

கல்லுண்டாய்வெளி திண்மக் கழிவகற்றல் நிலையம் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது என்றும், அங்கு அடிக்கடி தீவிபத்து இடம்பெறுவதாலும் வலிகாமம் மேற்கு பிரதேசசபையில் அண்மையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் இந்த விடயம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுக்கவும் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This