‘கலாநிதி பட்டம்’ – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ; நெருக்கடியில் அரசாங்கம்
சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றதாக பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் அவரின் பதவியை பறிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சைக்குரிய விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா? என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருதுடன், இதற்கு உரிய தருணத்தில் பதில் அளிப்பதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டு அவர் சபாநாயகரான பிறகும் இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் இல்லை என பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதால் சமூகத்தில் இந்த விடயம் விவாதமாக உருவாகியுள்ளது.
இதற்கு மத்தியில் நாடாளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயருக்கு முன்னால் இருந்த கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளமை மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இதுதொடர்பில் பதில் அளிப்பதாக சபாநாயகர் கூறியுள்ளார். என்றாலும், இந்த விடயம் தொடர்பில் எதிக்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, சபாநாயகர்தான் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்பதுடன், நாட்டின் பிரதான பதவிகளுக்கு தலைவர்களையும் பொறுப்பாளர்களையும் நியமிக்கும் குழுக்களின் தலைவராகவும் இருக்கிறார். அவ்வாறானவர் சமூகத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும், உலகத்துக்கும் தமது கல்வி அறிவு குறித்து பொய்யான செய்தியொன்றை கூறியிருந்தால் அவர் அந்த கதிரையில் அமர்ந்திருப்பதில் எவ்வித தார்மீகமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவரும் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று வெள்ளிக்கிழமை கையெடுத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.