இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்​கை – இந்திய குழுவினர் சந்திப்பு

இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்​கை – இந்திய குழுவினர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்று (05) இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறாக நடைபெற்றது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த முக்கியத்துவத்துவம் வாய்ந்த சந்திப்புக்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்து கொண்டார். இதன்போது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு பயிற்சி வாய்ப்புகள், திறன் மேம்பாடு, அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவி உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பின்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், கடந்த காலங்களில், இந்தியா அளித்த ஆதரவிற்காக இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய தூதுக்குழுவினர் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரைப் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நட்புறவைப் பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தியப் பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார். மேலும் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் வகையில் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். இரு தரப்பினரும் வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளைத் தொடரவும், குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் இணக்கம் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This