மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப்பணம் நேற்று திங்கட்கிழமை (5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகரினால் மன்னார் மாவட்டத்தில் சாவற்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது தலையுறை பயன்படுத்தாமை, மருத்துவ அனுமதி பெறாமை, உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப் படுத்தியமை, கழிவுநீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை, சுத்தம் பேணப் படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (5) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தில் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட உணவகத்தில் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் அதே நேரம் உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டது.

அத்துடன் மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டு மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This