பழைய அரசாங்கங்களின் கொள்கையை பின்பற்றும் ‘அநுர அரசு’ – தமிழர்கள் குற்றச்சாட்டு

பழைய அரசாங்கங்களின் கொள்கையை பின்பற்றும் ‘அநுர அரசு’ – தமிழர்கள் குற்றச்சாட்டு

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) புதுப்பிப்பதன் மூலம் தமது வாக்காளர்களை திருப்திபடுத்தும் பழைய கொள்கையையே புதிய ஜனாதிபதியின் அரசாங்கமும் கடைப்பிடிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டறியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் தாய்மார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் முதலாவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி டிசம்பர் 10ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு சர்வதேச நீதிக்கான கோரிக்கையை மீண்டும் முன்வைத்தனர்.

76ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் (ARED) செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தலைமையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் பேரணியை ஆரம்பித்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கிளிநொச்சி  பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாாக அதனை நிறைவு செய்து, கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிவானந்தன் ஜெனிட்டா தலைமைத்தாங்கினார்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் நெருங்கிய ஒரு உறவினரைக் கூட கண்டுபிடிக்க முடியாது ஏழு வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு மேலும் புதிய உறுப்பினர்களை இணைத்து மீண்டும் அதனை உயிர்ப்பிக்கும் முயற்சி தமிழ் தாய்மார்களுக்கு வேதனையளிப்பதாக, லீலாதேவி ஆனந்தநடதராஜா ஊடகவியலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

“மாற்றம் என்ற பேருடன் வந்துள்ள புதிய அரசாங்கம் நாங்கள் புறக்கணித்த ஓஎம்பியை புதுப்பிக்க வேண்டுமென்ற உத்வேகத்துடன் செயற்படுவது எங்களுக்கு மன வேதனையை தருகிறது. ஓஎம்பிக்கு ஆட்சிசேர்ப்பு செய்வதால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் பழைய அரசாங்கங்கள் போல் தமது வாக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே குறியாக இருக்கப்போகின்றார்கள் என்பது தெளிவாகிறது.”

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல், நிர்வகித்தல் மற்றும் செயற்படுத்தல் ஆகிய விதிகளுக்கு அமைவாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.

வவுனியா கந்தசாமி கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்து, வவுனியா பேருந்து நிலையம் வரை  தீச்சட்டியை தலையில் சுமந்துகொண்டு பேரணியாகச் சென்ற தமிழ்த் தாய்மார்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி சிவானந்தன் ஜெனிட்டா தலைமைத்தாங்கினார்.

துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டார்

தமது உயிரை விடுவதற்கு முன், தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி வரும் அனைத்து தாய்மார்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த ஜெனிட்டா, தமிழ்த் தாய்மார்களின் வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச சட்டப் பொறிமுறையின் ஊடாக குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

“சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி நீதியை பெற்றுத்தாருங்கள் என்றுதான் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் அது மறுக்கப்பட்ட நீதியாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிவடைந்து நாங்கள் தொடர்ச்சியாக போராடுகின்ற போதிலும் 300ற்கும் மேற்பட்ட தாய், தந்தையர் எவ்வித பதிலும் இன்றி இறந்துள்ளனர். எனவே இந்த சாட்சியங்கள் இறக்கும் முன் நீதியை பெற்றுத்தருமாறு கோருகின்றோம்.”

போரினால் மிகவும் அழிவடைந்த முல்லைத்தீவில் மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தலைமையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டார்.

நீதி கேட்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வரையில் மனித உரிமைகள் தினம் ஒரு துக்க நாள் மாத்திரமே எனவும் அவர் வலியுறுத்தினார்.

“சர்வதேச மனித உரிமைகள் நாள் தமிழர்களுக்கானது இல்லை. தமிழர்களுக்கு அந்த உரிமைகள் இல்லை. வடக்கு, கிழக்கிலே அடக்கப்படுகின்றார்கள். அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள். புலனாய்வுத்துறை அச்சுறுத்துகிறது. பொலிஸார் கைது செய்கின்றனர். இந்த வகையில் இன்றைய மனித உரிமைகள் தினம் அவசியமா? இது துக்க தினம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு நாம் அழுத்தமாக கூறிக்கொள்கின்றோம். வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்வரை மனித உரிமைகள் தினம் துக்க தினம்தான்.”

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு தலைமைத் தாங்கிய யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி சிவபாதம் இளங்கோதை, தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதியைக் கண்டுபிடிப்பதாகக் கூறி அரசாங்கங்களால் நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பயனற்றவை என குற்றஞ்சாட்டினார்.

“இவ்வளவு காலமும் நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். அந்த ஆணைக்குழு, இந்த ஆணைக்குழு, அந்த பொறிமுறை, இந்த பொறிமுறை, நல்லிணக்க ஆணைக்குழு, ஓஎம்பி எங்களுக்கு இதுவரையிலும் ஒருவரும் எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை தரவில்லை. நாங்கள் ஐந்து பேரின் விபரங்களைத் தந்தோம் ஓஎம்பிக்கு இவர்களை கண்டுபிடியுங்கள் என்று, அதனை செயற்படுத்தினால் நாங்கள் ஓஎம்பியை நாடுவோம் என்று சொன்னோம். ஆனால் கொடுத்த ஆவணங்களைக்கூட தொலைத்துவிட்டார்கள். பிறகு என்ன ஓஎம்பி, பிறகு என்ன நல்லிணக்கம். எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை.”

நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்

உயிருடன் இருக்கும் போதே அரச பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களின் கதி என்னவென? மனித உரிமை அமைப்புக்கள் சர்வதேசத்திடம் கேள்வி எழுப்புவதில்லை என, மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத்தாங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவெல் உதயச்சந்திரா கேள்வி எழுப்பியிருந்தார்.

“வயது போன காலத்தில் நாங்கள் நிம்மதியா இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் பிள்ளைகளை நம்பித்தானே ஒப்படைத்தோம். திரும்பி வருவார்கள் என்றுதானே ஒப்படைத்தோம். நாங்கள் உயிரிழந்த பிள்ளைகளுக்காக போராடவில்லையே? உயிருடன் ஒப்படைத்த பிள்ளைகளுக்காகவே போராடுகின்றோம்.  அதுத் தொடர்பில் மனித உரிமைகளுக்காக செயற்படும் அமைப்புகள் சர்வதேசத்திடம் கேள்வி எழுப்புவதில்லை?”

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மன்னாரில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவிற்கு அருகாமையில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலராஜ் அமலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

தனது இரத்த உறவினர்களின் கதி என்ன என்பதை உடனடியாக வெளிப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட அவர், பாதுகாப்பு படையினரின் விசாரணைகளால் தமிழ் தாய்மார்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் தாய்மார்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

“இந்த இராணுவம், இந்த முகாமில் இருந்துதான் எப்படி உறவுகளை கொண்டுச் சென்றது நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். இதனை விசாரிக்காமல், பாதிக்கப்பட்ட தாய்மாரையே விசாரித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இன்று நாங்கள் ஒவ்வொருத்தரும் நோய்வாய்ப்பட்டு, இறந்துகொண்டிருக்கின்றோம். இனியும் தாமதிக்காமல் எங்களுக்கான தீர்வை தர வேண்டும். எங்கள் உறவுகளை திருப்பித்தர வேண்டும். இல்லாவிடின் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு அறிவிக்க வேண்டும்.”

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அம்பாறை நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி கருத்து வெளியிட்ட, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுவதா குறிப்பிட்டார்.

“எங்களுக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை. எத்தனையோ உள்ளக பொறிமுறைகளை கொண்டுவந்து எங்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றது. 149,679 பேரை நாங்கள் இறுதி யுத்தத்தில் இழந்து நிற்கின்றோம். அது மாத்திரமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. சுதந்திரத்திற்கு முன்னர் இருந்து எமது மக்கள் எமது உறவுகள் இறந்ததை வைத்து பார்த்தால். இலங்கை முதலாவது இடத்தில் இருந்திருக்குமோ என்ற கேள்விக் குறி எமக்கு தோன்றுகிறது.”

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கே.செபஸ்டியன் தேவி தலைமையில், கடந்த டிசம்பர் 10ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Share This