பிமல் விடுத்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தனவா? நாட்டில் துப்பாக்கிடுகள் அதிகரிப்பு – தலைத்தூக்கியுள்ள பாதாள உலகம்

பிமல் விடுத்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தனவா? நாட்டில் துப்பாக்கிடுகள் அதிகரிப்பு – தலைத்தூக்கியுள்ள பாதாள உலகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவரான கெஹெலிய ரம்புக்வெல்லவைக் கைது செய்திருந்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைக் கைது செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போல இருக்க முயற்சிக்குமாறு உதய கம்மன்பில ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

சுங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்க அமைச்சர் பிமலுக்கு என்ன உரிமை இருக்கிறது?

”ஜனவரி 18, 2025 அன்று துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் எவ்வித ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆபத்து சுங்க அதிகாரிகளாலேயே நாட்டிற்கு வெளிப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், அமைச்சர் பிமல் ஒரு ஹீரோவைப் போல ஊடகங்கள் முன் வந்து, அவை அவரது உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார்.

துறைமுகம் அவருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு சுங்கம் ஒப்படைக்கப்படவில்லை. நிதியமைச்சர் என்ற முறையில் சுங்கம் ஜனாதிபதியின் கீழ் உள்ளது. அமைச்சர் பிமலுக்கு என்ன உரிமை இருக்கிறது தனக்குச் சொந்தமில்லாத சுங்க நிறுவனங்களுக்கு உத்தரவுகளை வழங்க? கொள்கலன் நெரிசலுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழுவின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க என்பது உண்மைதான். இந்தக் குழுவின் பங்கு, சுங்க இயக்குநருக்கு  உத்தரவுகளை வழங்குவது அல்ல, அதன் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாகும்.

சுங்கம் மறைக்கும் ரகசியம் என்ன?

இந்தக் கொள்கலன்களில் என்ன இருக்கிறது என்று கேட்க, பிப்ரவரி 8, 2025 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சுங்க நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினோம். ஏப்ரல் 3, 2025 அன்று, அவை எங்கே போகின்றன என்ற பதில் எங்களுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு இல்லாமல் அனுப்பப்பட்ட எத்தனை கொள்கலன்கள் சிவப்பு பாதையில் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டன, செம்மஞ்சல் ஆரஞ்சு பாதையில் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டன என்று கேட்டோம். கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின் நகல் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “நீங்கள் கோரிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது இலங்கை சுங்கத்திடம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு இல்லாமல் அனுப்பப்பட்ட எத்தனை கொள்கலன்கள் சிவப்பு பாதையில் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டன, எத்தனை செம்மஞ்சல் பாதையில் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டன என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையான ஆவணங்கள் சுங்கத்திடம் இல்லை என்பது இயற்கைக்கு மாறான சூழ்நிலை இல்லையா? சுங்கம் இங்கே மறைக்க முயற்சிக்கும் ஒரு பெரிய ரகசியம் உள்ளது என்பது தெளிவாகிறது.

அந்த கொள்கலன்கள் ஆய்வு செய்யப்படாததால், அவற்றில் என்ன இருந்தது என்ற கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியாது. இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்தன என்று நாங்கள் நம்புகிறோம். ஜனவரி 18, 2025 க்குப் பின்னர் துப்பாக்கிச் சூடுகள் அதிவேகமாக அதிகரிக்கத் தொடங்கின. பாதாள உலகம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இல்லாமல் செயலற்றதாக இருந்தன. கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டவுடன், பாதாள உலகமும் தீவிரமாகியது. இப்போது துப்பாக்கிச் சூடு நடக்காத ஒரு நாள் கூட இல்லை.

சில ஊடகங்கள் “தினத்தின் துப்பாக்கிச் சூடு” என்ற செய்தி அம்சத்தைக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 49 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் 30 இறப்புகளும் நடந்துள்ளன. இந்த இறப்புகள் ஒவ்வொன்றின் இரத்தமும் அமைச்சர் பிமலின் கைகளில் இருப்பதாக நாங்கள் கூறுகிறோம். கொள்கலன்களை விடுவிக்க சுங்கத்திற்கு உத்தரவிட்டதாக அமைச்சர் பிமல் ஒப்புக்கொண்டால், சுங்கத்துறை நிதி அமைச்சின் கீழ் இருந்தால், அமைச்சர் பிமல் நிதி அமைச்சர் இல்லை என்றால், அவர் சட்டவிரோதமான செயலைச் செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கைது செய்து புதிய சாதனை படைத்தார். அதற்கு முன்னர் எந்த அமைச்சரவை அமைச்சரும் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, குறைந்தபட்சம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையாக இருக்க முயற்சிக்குமாறு ஜனாதிபதி அனுரவிடம் கேட்டுக்கொள்கிறோம். என்றும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This