ஒபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் முழுவதும் பல இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒபரேஷன் சிந்தூருடன் இணைந்த இந்திய தாக்குதல்கள் பாகிஸ்தான் விமானப்படையின் உள்கட்டமைப்பில் சுமார் 20 வீதம் அழித்ததாகவும், அந்நாட்டின் பல போர் விமானங்களை சேதப்படுத்தியதாகவும் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, பாகிஸ்தான் விமானப்படையின் F-16 மற்றும் JF-17 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா மற்றும் போலாரி உள்ளிட்ட வெடிமருந்து கிடங்குகள் மற்றும் விமான தளங்கள் போன்ற முக்கியமான இடங்கள் இந்திய தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தில் உள்ள போலாரி விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் கடுமையானது எனவும், பாகிஸ்தான் விமானப்படை ஸ்க்வாட்ரான் தலைவர் உஸ்மான் யூசுப் மற்றும் நான்கு விமானப்படை வீரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படையின் பல விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சிந்தூர் நடவடிக்கையின் கீழ், இந்தியப் படைகள் பரந்த அளவிலான பாகிஸ்தான் இராணுவத் தளங்களைத் தாக்கின.
இதன்படி, ரஃபிகி, முரிட், ஸ்கர்டு, போலாரி, சுக்கூர், சியால்கோட், பஸ்ரூர், நூர் கான், சுனியன், சர்கோதா மற்றும் ஜகோபாபாத் ஆகிய விமானத் தளங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஜகோபாபாத்தில் உள்ள ஷாபாஸ் விமானப்படை தளத்தில் குறிப்பிடத்தக்க அழிவை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.