கொழும்பு மாநகர சபையை ஆளப் போவது யார்? பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம்

அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது.
எனினும் இதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாநகர சபையையின் நிலையும் அவ்வாறே அமைந்துள்ளது. உள்ளூராட்சிமன்றங்களில் மிக முக்கிய சபையாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்வதற்காக போதிய பெரும்பான்மைய எந்த கட்சிகளும் பெற்றிக்கவில்லை.
கொழும்பு மாநகசபையில் ஆட்சியமைப்பதற்கு அவசியமான 59 உறுப்பினர்கள் அல்லது அதற்கு அதிகமான உறுப்பினர்களை எந்த அரசியல் கட்சிகளும் தனித்து பெற்றுக்கொள்ளவில்லை.
தேர்தல் முடிவுகளின் படி, தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 48 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட சுயேட்சைக் குழுக்கள் அனைத்தும் 69 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆளும் கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 48 பேரில் 12 பேர் தமிழர்கள் எனவும், ஏனைய கட்சிகள் சார்பிலும் கொழும்பு மாநகர சபைக்கு அதிகளவான தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன.
எனினும், கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்றும் திறனை எதிர்க்கட்சி இழந்துள்ளதாகவும், ஆளும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பல சுயேச்சைக் குழுக்களும் சிறிய கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் முதல் முறையாக, கொழும்பு மேயர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேராத ஒரு பெண் வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிரதி மேயர் பதவி தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற சண் குகவரதனுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளும் கட்சிக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கொழும்பு மாநகர சபையில் நீண்ட காலமாக வழங்கி வரும் திறமையான சேவையைத் தொடர, எதிர்க்கட்சியில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியுடன் இணக்கமாகச் செயல்பட்டு ஆட்சியை நிலைநாட்ட ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
“மக்களுக்கு பொய் சொல்லாமல் செயல்படும் ஒரு அரசாங்கத்தை வழங்குவதற்காக, எதிர்க்கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, அந்தக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது.”
கொழும்பு மாநகர சபையில் நீண்ட காலமாக அதிகாரத்தை வகித்து வந்த அதே வேளையில், இதன் மூலம் வழங்கிய திறமையான மற்றும் சிறந்த சேவையைத் தொடர எங்கள் கட்சி பாடுபடுகிறது என்றார்.