பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்தியப் பாடல்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன.

பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் வரவேற்றுள்ளார். இந்த முடிவானது தேசபக்தி எனவும் அவர் விபரித்துள்ளார்.

இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறினார்.

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த ‘அபிர் குலால்’ திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படாது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

பாகிஸ்தானுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் படத்தைத் திரையிடத் தயாராக இல்லை என்றும், பல அமைப்புகள் படத்தைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

பின்னர், பாகிஸ்தானின் மூத்த விநியோகஸ்தரான சதீஷ் ஆனந்த், அபிர் குலால் பாகிஸ்தானிலும் வெளியிடப்படாது என்பதை உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, ‘அபிர் குலால்’ படத்தின் இரண்டு பாடல்களான குதயா இஷ்க் மற்றும் அங்ரேஜி ரங்ராசியா ஆகியவை யூடியூப் இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This