தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த இனவாத மூலதனத்தை தற்போது கையில் எடுக்க முயற்சிக்கும் ரணில்

அநுர, புரிந்து கொள்வார் — ரணில், சமஸ்டி தருவார் — சஜித் நல்லவர் — என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, காலத்துக்கு காலம் மாறி மாறி சிங்கள தலைவர்கள் பின்னால் செல்லும், தமிழர்கள், புரிந்து கொள்ள வேண்டி யதார்த்தம்?
லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் தாக்கப்பட்ட பின்னணியில், லண்டன் நகர வீதி ஒன்றில் இந்தியா – பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு வாக்குவாதம் புரிகின்றனர்.
காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட பின்னர் இந்த மோதல் ஆரம்பித்திருக்கிறது எனலாம்.
இப்போது கேள்வி என்னவென்றால்–
1) காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஏன் பாகிஸ்தான் உதவி புரிகிறது?
2) பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண விடுதலை இராணுவத்துக்கு ஏன் இந்தியா ஒத்துழைக்கிறது?
எந்த ஒரு இனத்திற்கும் ”தேசியம்” என்பது அடையாளம். அது மரபுரிமை.
ஆனால் ஒரு தேசிய இனம் ”அரசு” என்ற சர்வதேச அந்தஸ்தை பெற்று விட்டால், தனது நாட்டுக்குள் வாழும் ஏனைய அரசு அற்ற தேசிய இனங்களை, அந்த அரசு ஒடுக்கும். அதற்கு ஏனைய அரசுகள் ஒத்துழைப்பு வழங்கும். இதுதான் யதார்த்தம்.
இந்த யதார்த்தத்துக்கு ஒத்தூத, ஐக்கிய நாடுகள் சபை – மனித உரிமைச் சபை – சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகளும் உண்டு.
இந்த அமைப்புகள் ஒரு அரசு சார்ந்தே தமது அறிக்கைககளை வெளியிடும். தமது தேவைக்கு ஏற்ப ஒப்பாரசத்துக்காக அரசு அற்ற இனம் ஒன்றின் உரிமைகள் பற்றிய கருத்துக்களையும் அவ்வப்போது அறிக்கையில் சேர்க்கின்றன.
ஆனால், அதனையும் ”மனித உரிமைகள்” – ”மீள் நல்லிணக்கம்” என்ற பொருள்களில் மாத்திரமே அறிக்கையிடுவர்.
”தேசிய இனம்” என்று அறிக்கையின் எந்த இடத்திலும் அந்த அர்த்தம் வராதவாறு மிக நுட்பமாக அவதானிப்பர்.
ஈழத்தமிழர் விவகாரம் பற்றிய ஜெனிவா மனித உரிமை சபையின் அறிக்கை அதற்கு நல்ல உதாரணம்.
ஆகவே, உலகில் இன்று பிரச்சினை இதுதான். ஆனால் என்னவோ ”இயற்கை நீதி” என ஒன்று உள்ளது.
அது இப்போது உலக நாடுகளுக்கு, அதாவது அரசு அற்ற தேசிய இனங்களை ஒடுக்கும் அரசுகளுக்கு ஏதோ ஒரு வகையில் பாடம் கற்பித்து வருகிறது.
சமீபத்திய உதாரணங்கள் பல உண்டு அவற்றில்—
1) இந்தியா – பாகிஸ்தான் மோதல்.
2) அமெரிக்க வரியும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் முரண்பாடும்- அதாவது ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் உலக அரசியல் – பொருளாதார ஒழுங்கு குழப்ப நிலைகள்.
3) ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான இஸ்ரேலின் சதிக் கோட்பாடுகள் அம்பலத்துக்கு வருகின்றமை.
4) ரசிய உக்ரெயன் மோதலும், ஐரோப்பிய நாடுகளின் பின்னடைவும். அமெரிக்க – ரசிய உறவு அல்லது அமெரிக்க – சீன மோதல். இதற்கு இந்தியாவின் இரட்டை வகிபாகம்.
இந்தியாவின் இந்த ”இரட்டை வகிபாகம்” இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு சாதகமான ஒன்று.
ஆகவே, உலக அரசியல் ஒழுங்கு குழப்பங்களை மையப்படுத்தி அநுர பெறவுள்ள சாதகங்களை தமக்குரியதாக மாற்ற —ரணில் – ராஜபக்ச – சஜித் போன்ற சிங்களத் தலைவர்கள் புதிய வியூகம் ஒன்றை, தத்தமது கட்சி அரசியலுக்கு ஏற்ப வகுக்கிறார்கள்.
இன்னும் சில மாதங்களில் புதிய திருப்பங்கள் – மாற்றங்களை அறியலாம்.
உதாரணமாக, உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரங்களில் அநுர வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிக நேரம் செலவிடுவதை, ”தமிழர்களுக்கு ஆதரவான ஜேவிபி” என்று சிங்கள சமூக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
அதாவது ஜேவிபியை நம்பி இடமாற்றம் செய்யப்பட்ட ”தூய இனவாதம்” என்பதை மீண்டும் வெறொரு தளத்திற்கு இடம் மாற்றும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது.
தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த ”இனவாத மூலதன ஆயுதம்” என்பதை கையில் எடுக்க ரணில் முயற்சிக்கிறார் என்பதே தற்போது கசிந்துள்ள தகவல்.
ஆகவே, 2009 மே மாதத்துக்குப் பின்னரான சூழலில் அநுர, புரிந்து கொள்வார்— ரணில், சமஸ்டி தருவார் — சஜித் நல்லவர் — என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு காலத்துக்கு காலம் மாறி மாறி சிங்கள தலைவர்கள் பின்னால் செல்லும் தமிழர்கள், இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அ.நிக்ஸன்