தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த அனைவரும் துரோகிகள் – இளங்குமரன் எம்.பி

நாளைய தினம் (ஏப்ரல் 17ஆம் திகதி) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துச் சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். எங்களின் வெற்றியை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால், ஏனையக் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க தமிழ் கட்சிகள் தற்போது ஒன்றிணைந்துள்ளன. எமது வெற்றியை தடுத்து நிறுத்த போலிப் பிரச்சாரம் செய்கின்றனர்.
2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் எல்லா மாற்று அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தனர். அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்கு தற்துணிவின்றி ஒன்றிணைந்தனர்.
அப்போது பேரளவில் மட்டுமே அனைவரும் ஒன்றுப்பட்டிருந்தனர். அதன் காரணமாகவே இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவுச் செய்யப்படவில்லை. இவ்வாறு இணைந்த அனைவரும் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.
இவர்கள் அனைவரும் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதுவரை பேரளவில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றது.
நாங்கள் பிரதேச சபைகளை கைப்பற்றும் போது அவர்களின் இருப்பு இல்லாமல் போய்விடும்” என்றார்.